நாம் எவ்வாறு ஊழியர்களுக்காகப் பணியாற்றுகிறோம் என்பதில் மாற்றம் செய்ய வேண்டும் - மாறிவரும் காலத்தின் தேவை காரணமாக
இங் சீ மெங், தலைமைச் செயலாளர், என்டியுசி
இன்று, பொருளாதாரம் பற்றிய சிந்தனை ஒவ்வொருவரின் மனதிலும் உள்ளது. அதற்கு நல்ல காரணம் உள்ளது.
கொவிட்-19 நோய்க்கிருமியின் மறுபரவல், உக்ரேன் போருடன் சேர்ந்து பெருமளவிலான விநியோகச் சங்கிலி மேலாண்மை பிரச்சனைகளை உருவாக்கியுள்ளன. இவை கூரையைத் தொடுமளவுக்குப் பணவீக்க விகிதத்தை உயர்த்தப் பங்காற்றியுள்ளன. உங்களைப் போன்ற அன்றாட வாழ்க்கை நடத்தும் மக்கள் நெருக்குதலை உணர்கின்றனர். உயர் உணவு விலைகள், உயர் எரிவாயு விலைகள், உயர் எண்ணெய் விலைகள் மூலம். மற்றும் உயர் மின்சாரக் கட்டணங்கள் ஆகியவை மூலம்.
ஆனால் நாங்கள் ஒன்றும் செய்யாமலிருக்கவில்லை. என்டியுசி ஃபேர்பிரைஸ், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதுடன் ஆபத்துக்குள்ளாபவர்களின் நிதி நெருக்கடியைத் தணிக்க அவர்களுக்கான கழிவுகளையும் வழங்குகிறது. என்டியுசி ஃபூட்ஃபேர் போன்ற நமது மற்ற சமுதாய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கட்டுபடியாகக்கூடிய உணவுகளையும் அத்தியாவசியத் தேவைகளையும் தொடர்ந்து வழங்குகின்றன.
நாம் இன்று எதிர்நோக்குவது உடனடிக் கவனம் தேவைப்படும் உண்மையான பிரச்சனையாக இருந்தாலும், இதைவிடப் பெரிய சவால் உண்டு – வேலையின் எதிர்காலம் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
சிங்கப்பூர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக வலுவான, நிலையான வளர்ச்சியை அனுபவித்து வந்துள்ளது. ஆனால் நமது பொருளாதாரம் இன்று முக்கிய முடிவெடுக்கும் நிலையை அடைந்துள்ளது. தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட துரிதமான முன்னேற்றங்கள் தொழில்கள் செயல்படும் விதத்தை மாற்றியுள்ளன. அது நமது ஊழியர்களின் பெரும் பிரிவினரிடையே பாதுகாப்பின்மைகளை உருவாக்குகிறது.
விரைவாகச் செயல்படும், உயர் திறன்களைப்பெற்ற, மின்னிலக்க அறிவுவெற்றவர்கள் பலன்பெற்றாலும், மற்றவர்கள் தங்களின் வாழ்க்கைத் தொழிலில் முன்னேற்றம் காண்பது கடினமாக இருக்கலாம். இது தொடர்ந்தால், சமமின்மையை அகலமாக்குவதுடன் நமது சமுதாய இழையும் தேய்ந்து இறுகிவிடும், அது நடக்காமல் இருப்பதை நான் உறுதி செய்ய விரும்புகிறேன். நான் பொறுப்பில் இருக்கும்போது அது இடம் பெறச் செய்ய விடமாட்டேன்.
இந்த சமமின்மையைக் குறைக்க என்டியுசியில் இருக்கும் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். படிப்படியாக உயரும் சம்பள முறையை 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியதன் மூலம் வேலையை உருமாற்றியுள்ளோம், ஊழியர்களின் திறன்களை உயர்த்தியுள்ளோம் மற்றும் அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தியுள்ளோம். இருந்தாலும் இப்போது நாம் மேலும் செய்ய வேண்டும்.
நாம் சிரமத்திற்கு ஆளானோம், சோதனைக்கு ஆளானோம். இருந்தாலும் மேலும் மனவலிமையுடன் வெளிப்பட்டுள்ளோம்.
கொவிட்-19 கிருமிப்பரவல் சிங்கப்பூரர்களை சிரமத்திற்கு ஆளாக்கி சோதனைக்குள்ளாக்கியது. நமது நியாயமான ஆட்குறைப்புக் கட்டமைப்பு வழி பலர் பாதுகாப்புப் பெற்றனர். ஊழியர்கள் வேலைகளை இழந்தபோது, பயற்சி மற்றும் வேலையில் அமர்த்துதல் வழி அவர்களுக்கு உதவ என்டியுசியின் வேலைப் பாதுகாப்பு மன்றம் முன்வந்தது. இந்தத் தொல்லைகள் நிறைந்த காலத்தைச் சுயமாக வேலை செய்பவர்கள் எளிதில் சமாளிக்க, அவர்களுக்கு வருமான நிவாரணத் திட்டத்தையும் நாங்கள் நிர்வாகம் செய்தோம்.
என்டியுசி பின்னணியில் போராடியது – ஊழியர்கள் தங்கள் வேலைகளை தக்கவைத்துக்கொள்ள; முதலாளிகள் தங்கள் ஊழியர்களைத் தொடர்ந்து வேலைகளில் வைத்துக்கொள்ள; இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் ஆதரவளிக்க; நாடு என்ற முறையில் நாம் வலுவாக மீண்டெழுந்தாலும் நம்மில் பலர் இன்னல்களை அனுபவித்துள்ளனர். அதன் காரணமாகத்தான், என்டியுசி கடந்த இரண்டு ஆண்டுகளாக இவற்றைப்பற்றி ஆழமாக சிந்தித்துவருகின்றது. எல்லா ஊழியர்களுடனும் உள்ள நெருக்கத்தையும் உடன்பாட்டையும் அடுத்த பத்தாண்டுகளுக்கு வலுப்படுத்த நாம் என்ன செய்யவேண்டும் என யோசிக்க தூண்டியுள்ளது.
ஊழியர்களுக்கு மேலும் சிறந்த எதிர்காலத்தை நோக்கிப் பணியாற்றுவோம்
சிங்கப்பூர் மேலும் அதிகமான வேலைகளை உருவாக்கியுள்ளது. இருந்தாலும் வேலை வாய்ப்புகள் பற்றி சிங்கப்பூரர்கள் இன்னும் அக்கறைகொள்கின்றனர். எனக்கு நிலையான, வழக்கமான வருவாய் இருக்குமா? என் வேலை வாய்ப்புக்கள் நன்றாக இருக்குமா? என் வேலை ஓய்வுக்கான நிதி போதிய அளவில் இருக்குமா? என் முதிய பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள வேலையிலிருந்து நேரத்தை எடுத்துக்கொள்ளத் தேவைப்படும்பொழுது எனது முதலாளி அதைப் புரிந்துகொள்வாரா? இவை, ஒவ்வொரு ஊழியரின் மனதிலும் உள்ள சில ஐயங்கள்.. அவற்றை நாங்கள் தீர்க்க விரும்புகிறோம்.
சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கவும் வருவாய்களை உயர்த்தவும் உலக முதலீடுகளுக்கும், வாய்ப்புகளுக்கும் மனித வளத்திற்கும் நாம் திறந்திருக்கவேண்டும். ஆம், போட்டி மேலும் கடுமையானதாக ஆகும்தான். நமது ஊழியர்கள் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நமது பொருளாதாரம் வாய்ப்புகளை வழங்குவதை உறுதிசெய்வோம். நமது ஊழியர்கள் உயிர்வாழ்ந்தால் மட்டும் போதும் என்று நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் செழிப்புற்றிருக்கவும் வேண்டும். அதுதான் நமது நோக்கமாக இருக்கவேண்டும், அதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு.
ஊழியர்கள் தங்களின் திறன்கள் காலத்திற்குப் பொருத்தமானதாக வைத்திருக்கச் செய்வதிலும், பயிற்சியை மேற்கொள்வதிலும் இந்தப் பத்தாண்டுகளிலும் அதற்கு அப்பாலும் நம்பிக்கையைப் பெறவும் என்டியுசி உதவும்.
தொழில்கள் உருமாற்றமடையும்போது, தங்களை மாற்றியமைத்துக்கொள்ள தங்கள் ஊழியரணியில் தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் ஆக்கப்பூர்வமாக முதலீடு செய்யவேண்டும். தேவைகள் ஏற்படும்போது மட்டும் ஊழியர்களைப் பயன்படுத்தி அவர்களை திருப்பி அனுப்பிவிடக்கூடாது.`
ஊழியர்களுடனான சமூக ஒப்பந்தத்தை அடைய உதவும் பொருட்டு அரசாங்கமும் சாதகமான சட்ட, பொருளாதார விதிமுறைகளை வழங்கவேண்டும்.
ஒன்றுபட்டு நாங்கள் இந்தப் பயணத்தை உங்களுடன் சேர்ந்து மேற்கொள்ளுவோம். வேலைகளுக்கான பயிற்சி, வேலையில் அமர்த்துதல் மற்றும் உருமாற்றம் ஆகியவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்துவோம். சரியான சூழலமைவுகளுடன், என்டியுசி, சமுதாய தொழில் நிறுவனங்கள் வழி புதிய தேவைகள் ஏற்படும் துறைகளில் விலையை நிலைப்படுத்த ஒன்றாக செயல்பட முடியும்.
நமது முத்தரப்புப் பங்காளிகளின் ஆதரவு நமக்கு இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். 2022-ம் ஆண்டு மே தினக் கூட்டத்தின்போது, பிரதமர் லீ சியன் லூங், என்டியுசி, “சிங்கப்பூரின் பொருளாதாரம் மற்றும் தேசிய இணக்கம் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் “ஆக்ககரமான மற்றும் மதிப்புமிக்க பங்காளியாக” இருப்பதையும் மாறுபட்ட ஊழியர் குழுக்களின் நலன்களைப் பிரதிநிதித்து முக்கியப் பங்காற்றுவதாகவும் அழுத்தமாகக் கூறினார்.
நமது முதல் நடவடிக்கை - #EveryWorkerMatters (#ஒவ்வொருஊழியரும்முக்கியம் )உரையாடல் தொடக்கம்
நேற்று நான் என்டியுசியின் #EveryWorkerMatters உரையாடலைத் தொடங்கி வைத்தேன். அது, வரும் ஒரு ஆண்டில், சிங்கப்பூரில் உள்ள நமது ஊழியர்களையும், அரசின் கொள்கைகளை உருவாக்குபவர்களையும், பங்காளித்துவ நிறுவனங்களையும் ஈடுபடுத்தும் நோக்கம் கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் எவற்றை விட்டுக்கொடுக்கவேண்டும் எத்தகைய தியாகங்கள் செய்யவேண்டும் என்பன உட்பட, வேலையைச் சுற்றியுள்ள சமுதாய ஒப்பந்தத்திற்கான அவர்களின் கருத்துக்கள், பேரார்வங்கள் பற்றி நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
முதலாவதாக, ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள எவ்வாறு அவர்களுக்குத் துணைபுரிவது, மேலும் இந்தப் புதுச் சூழலில் எப்படி போட்டியிடச் செய்வது?
நிறுவன உருமாற்றம், வேலைகளை மறுவடிவமைத்தல், ஊழியர்களுக்கு மறுதிறன்களை வழங்குதல் ஆகியவற்றில் உதவ என்டியுசி நிறுவன பயிற்சி குழுக்களை 2019-ம் ஆண்டில் நிறுவியது. ஜூலை 2022 தேதியில், 1,000-கும் மேற்பட்ட குழுக்கள் 28 துறைகளை உட்படுத்தி நிறுவப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் என்டியுசியின் பயிற்சி மற்றும் வேலையில் அமர்த்துதல் சூழல்முறை மூலம் பங்குபெறும் குழுக்களைச் சேர்ந்த 96,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலனடைந்துள்ளனர். சிங்கப்பூரின் பசுமை மாற்றம் மற்றும் மின்னிலக்க உருமாற்றம் மூலம் சிங்கப்பூர் ஊழியர்களும் நிறுவனங்களும் மேலும் போட்டித்தன்மைமிக்கவர்களாக இருக்க மேலும் செய்யப்படலாம். அதே வேளையில், வேலைவாய்ப்புகளை வலுப்படுத்தும், வேலையில் அமர்த்தப்படும் மற்றும் முன்னேற்றத்தைத் தரும் வாழ்நாள் கற்றலில் முதலீடு செய்வதையும் மறந்துவிடக் கூடாது.
தங்களுக்குத் தேவைப்படும் நிதி ஆதரவை ஊழியர்கள் பெற்றிருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். காரணம், உறுத்தலான உண்மை என்ன வென்றால், பல ஊழியர்கள் அவர்களை அறியாமலேயே ஆட்குறைப்புக்கு ஆளாகக்கூடும். முக்கியமான கேள்வி வேலை தேடும் நமது ஊழியர்களுக்கு சிங்கப்பூர் எவ்வாறு வலுவான நிதி ஆதரவை வழங்க முடியும் என்பதாகும். வேலை தேடும் சிரமமான காலத்தில் தங்களின் வலுவான வேலை பற்றிய நெறிமுறைக்கு விருதளிக்கும் வகையில் அது இருக்கவேண்டும். நமது தொழிலர், மேலாண்மையாளர்கள், நிர்வாகிகள் (பிஎம்இகள்) பணிக்குழு மூலம் 10,000-கும் மேற்பட்டோரை ஈடுபடுத்தியதன் மூலம் இதற்கு வலுவான ஆதரவைப் பெற்றோம்.
நமது அமைப்புமுறையில் சிங்கப்பூரர்களான ஊழியர்களுக்கு நம்பிக்கையை வழங்கி அவர்கள் தங்களின் ஆகச் சிறந்தவற்றைத் தர ஊக்குவிக்கவும் ஒரு சமமான ஆடுகளம் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். மோசமான முதலாளிகளின் மீது நடவடிக்கை எடுக்க பாகுபாடு காட்டும் பழக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சட்டத்தில் இணைக்க முயற்சிகள் எடுக்கப்படும் வேளையில், வேலைவாய்ப்புக்களுக்கான சூழல் நியாயமானது என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்ளச் செய்யும் வகையில் பழக்கங்களை நாம் எப்படி வலுப்படுத்துவது? வேலை அனுமதி அட்டைக்காக புதிய குறைநிரப்பு மதிப்பீட்டு கட்டமைப்பு முறையை (கம்பஸ்) உருவாக்க என்டியுசி அரசாங்கத்துடன் பணியாற்றி வருகிறது. நமது உள்நாட்டு ஊழியரணிக்கு எப்படி வெளிநாட்டு ஆள்பலம் சிறந்த வகையில் துணையாக இருக்க முடியும் என்பதை நாங்கள் கேட்டறிய விரும்புகிறோம்.
இரண்டாவதாக, தங்களின் வாழ்க்கைத் தேவைகள் உருமாறி வரும் வேளையில், நமது ஊழியர்களுக்கு ஆதரவளிக்க எப்படி நாம் வலுவான வாக்குறுதிகளை வழங்குவது?
இதனால்தான் இந்த ஆண்டு ஜூலை மாதத்தொடக்கத்தில் என்டியுசி இளையர் பணிக்குழுவைத் தொடக்கி வைத்தோம். தங்களின் வாழ்க்கைத் தொழில்களில் சிறந்த ஆதரவைப் பெறவும் நீண்ட கால அடிப்படையில் வாழ்க்கைத் தொழிலில் வெற்றியடையவும் அவர்களுக்கு எப்படி வாக்குறுதிகளை வழங்குவது என்பதைக் கேட்டறிவதற்கான அர்ப்பணிக்கப்பட்ட முயற்சியாக அது அமைந்தது,
மக்கள் தொகை முதுமையடையும் வேளையில், நமது ஊழியர்கள் வேலை செய்வதுடன் தங்களின் முதிய பெற்றோர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும். இத்தகைய தேவைகளுக்கான அழுத்தங்களும் தொடர்ந்து வளரும். ஆகவே, முதியோர் பராமரிப்புக்கு எப்படி மேலும் ஆதரவு வழங்கலாம் என்பதை ஆராய்வோம். அதன்மூலம் நமது ஊழியர்கள் தங்களின் பராமரிப்பு வழங்கும் பொறுப்புகளுடன் தங்கள் வாழ்க்கைத் தொழிலையும் மேலும் சிறந்த சமநிலையுடன் மேற்கொள்ள முடியும்.
தொழில்கள் உருமாறும்பொழுது, நமது முதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அர்த்தமுள்ள வகையில் பங்காற்ற அவர்களின் வலிமைகளை ஒன்றுதிரட்டி வழிகளைக் கண்டறிய என்டியுசி தொடர்ந்து முழுக் கடப்பாடு கொண்டுள்ளது. ஆனால் அதே வேளையில் வேலைஓய்வுக்கான போதிய தொகை ஊழியர்களுக்கு இருப்பதை எப்படி உறுதிசெய்வது என்பது பற்றியும் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
மூன்றாவதாக, ஆபத்துக்குள்ளாகும் ஊழியர்களை நாம் எப்படிப் பாதுகாப்பது?
நமது குறைந்த சம்பளம் ஈட்டும் ஊழியர்களுக்கு, பிடபள்யுஎம் திட்டத்தை அமல்படுத்தவும் உற்பத்தித்திறனுடன் தொடர்புடைய சம்பள வளர்ச்சியை உறுதிசெய்யவும் என்டியுசி நமது பங்காளிகளுடன் பணியாற்றியுள்ளது. சமமின்மையைத் தடுக்கும், வேலைகளை உருமாற்றம் செய்யும், முன்னேற்றத்திற்கு மேலும் அதிக பாதைகளை உருவாக்கும் நமது கூட்டு விருப்பத்தை பிடபள்யுஎம் பிரதிநிதிக்கிறது. நமது உதவி தேவைப்படும் ஊழியர்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன. சில துறைகளில் இந்த பிடபள்யுஎம் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், மேலும் அதிக துறைகளை, நிறுவனங்களை, நடுத்தர வருவாய் வேலைகளை உள்ளடக்க பிடபள்யுஎம்மிற்கு வாய்ப்புக்கள் உள்ளதா?
குறுகிய கால வேலைவாய்ப்புகளை வழங்கும் பொருளாதாரம் சுதந்திரத்தன்மைக்கும் பாதுகாப்பிற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது குறித்த புதிய கேள்விகளை முன்வைக்கிறது. ஆபத்துக்குள்ளாகும், சுயமாக வேலை செய்பவர்கள், மற்றும் யாரையும் சாராமல் வேலை செய்பவர்கள் ஆகியோருக்கு என்டியுசி இணையம் வழி குறுகியகால சேவை வழங்கும் ஊழியர்களுக்கான ஆலோசனைக் குழு வழி என்டியுசி பணியாற்றி வருகிறது. பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவது, வேலை ஓய்வு மற்றும் வீட்டு வசதிக்கான போதிய சேமிப்பு இருத்தல், வேலையிட காயம் ஏற்படுதலுக்கு எதிராக மேலும் அதிகப் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஊழியர்களின் கருத்துக்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
நமது #EveryWorkerMatters உரையாடலில் ஒவ்வொரு குரலும் முக்கியம் பெறுகிறது
என்டியுசியின் சார்பாக, ஊழியர்கள், முதலாளிகள், அரசின் கொள்கை வகுப்போர், மற்றும் பங்காளித்துவ நிறுவனங்கள் ஆகியோரை நமது #EveryWorkerMatters உரையாடலில் சேர்ந்துகொள்ளுமாறு அழைக்கவிரும்புகிறேன். நமது ஊழியர்களின் அக்கறைகள், முன்னுரிமைகள் மற்றும் பேரார்வங்கள் ஆகியவற்றை புரிந்துகொள்ள என்டியுசியிக்கு இந்த உரையாடல்கள் உதவும்.
இந்த உரையாடல்கள் மூலம், நமது வேலையிடத்தில் நமது இலக்குகளை அடைய, வேலை செய்யும் மக்கள் என்ற வகையில் நம்மில் ஒவ்வொருவரும் எதை விட்டுக்கொடுக்க விரும்புகிறோம் என்பதையும் நாங்கள் கேட்டறிய விரும்புகிறோம். நமது ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் ஆகியவை எத்தகைய பங்கை – இன்றைக்கு, நாளைக்கு வரக்கூடிய ஆண்டுகளில் – ஆற்ற உள்ளனர் என்பதை முன்னரே தெரிந்துகொள்ள விரும்புகிறோம். வேலை மற்றும் வேலை வாயப்புகளைச் சுற்றியுள்ள சிங்கப்பூரின் சமுதாய ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு எத்தகைய பண்புகள் நமக்கு வழிகாட்ட வேண்டும் என்பதையும் அறிய விரும்புகிறோம்.
அதன் பிறகு நாம் கூட்டாக தீர்வுகளை உருவாக்கலாம். உங்களுக்கு ஆதரவளிக்க, ஒன்றாகச் சேர்ந்து முன்னேற்றம் காண, நமது சமுதாய ஒப்பந்தத்தின் மூலம் வேலையின் எதிர்காலத்தை வடிவமைக்க.
நமது இறுதி இலக்கு எளிமையானது. தங்களைப் பெருமைகொள்ளச் செய்யும் வேலைகளை ஊழியர்கள் பெற்றிருப்பதை உறுதி செய்தல். ஊழியர்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்ய உதவுதல். மேலும் சிறந்த எதிர்காலத்தை – மேலும் சிறந்த வேலைகளை, மேலும் சிறந்த வாழ்க்கையை - ஊழியர்களுக்கு வழங்குதல். ஏன் எனில், ஒவ்வொரு ஊழியரும் முக்கியம் – எனக்கும் என்டியுசி-க்கும்.